


















Updated on
:
1 min read
புதுடெல்லி: இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஏர் சீனா நிறுவனம், பெய்ஜிங் - டெல்லி இடையிலான தனது விமான சேவையை செவ்வாய்க்கிழமை தொடங்கியுது.
கடந்த 2020-ம் ஆண்டு நிலவிய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் மற்றும் கரோனா பரவல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது படிப்படியாக விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இதுகுறித்து சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள செய்தி: பெய்ஜிங் மற்றும் டெல்லி இடையிலான நேரடி விமான சேவையை செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு 3 நாட்களில் ஏர் சீனா வழங்க உள்ளது. இதற்காக ஏர்பஸ் 330 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெய்ஜிங்கில் இருந்து மதியம் 3:15 மணிக்கு புறப்படும் ஏர் சீனா விமானம், இந்திய நேரப்படி இரவு 8:20 மணிக்கு டெல்லியை வந்தடையும். இதன் ஆரம்பக்கட்ட பயணக் கட்டணம் சுமார் 3,570 யுவான் அதாவது சுமார் ரூ.49,000-ஆக (சுமார் 523 அமெரிக்க டாலர்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏர் சீனா நிறுவனத்தைத் தொடர்ந்து, பிற விமான நிறுவனங்களும் தங்களது சேவையை விரிவுபடுத்தி வருகின்றன. சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி முதல் குன்மிங் - கொல்கத்தா இடையிலான சேவையைத் தொடங்கியது. முன்னதாக, 2025 நவம்பரில் ஷாங்காய் - டெல்லி சேவையை இந்நிறுவனம் மீண்டும் தொடங்கியது. இந்திய நிறுவனமான இண்டிகோ, மார்ச் 30-ம் தேதி முதல் கொல்கத்தா - ஷாங்காய் தினசரி நேரடி விமான சேவையைத் தொடங்கியுள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறுகையில், "இந்திய - சீன உறவு சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. வேறுபாடுகளைக் காட்டிலும் இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான நலன்களே அதிகம்.
உலகளாவிய சூழலில் சவால்கள் நிறைந்திருக்கும் நிலையில், இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தலாகப்பார்க்காமல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதிச் செயல்பட வேண்டும். இரு நாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, கூட்டாளிகளாகப் பயணிக்கச் சீனா தயாராக உள்ளது" என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。