




















Updated on
:
1 min read
பெரியகுளம்: ஒவ்வொரு தேர்தலிலும் சாலை வசதி செய்து தருவதாக வாக்குறுதி தந்து விட்டு அதை யாரும் நிறைவேற்றுவதில்லை என்று கூறி அகமலை கிராம மக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல விடாமல் தகரங்களால் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, சுப்பிரமணியபுரம், குறவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இருப்பினும் இக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியகுளம், சோத்துப் பாறை வழியாக வெகுதூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. தொடர்ந்து பல தேர்தல்களிலும் அரசியல்வாதிகள் வாக்குறுதிகள் அளித்தும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இது இருந்து வருகிறது.
இந்நிலையில், இக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பக்கத்து தொகுதியான பெரியகுளம் வழியே நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. தகவலறிந்த இக்கிராம மக்கள் சோத்துப்பாறை அணை அருகே திரண்டு வந்து அங்குள்ள பாதையை தகரங்களால் அடைத்து மறியலில் ஈடுபட்டனர்.
வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்ல விடமாட்டோம் என்று கோஷமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் தேர்தலை புறக்கணிக்க இருக்கிறோம். ஆகவே எங்கள் ஊருக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வர வேண்டாம் என்று கூறினர்.
இதனால் வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான காவல் துறையினர், மலைகிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, உரிய நிதி ஒதுக்கி திட்டங்களை தொடங்கினாலும் வனத்துறை அனுமதிக்காததால் சாலை அமைக்க முடியவில்லை. இருப்பினும் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் பேசி சாலை அமைய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்பு மின்னணு வாக்குப்பகுதி இயந்திரங்கள் குதிரையில் ஏற்றி மலை கிராம வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。