






















Updated on
:
1 min read
சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.
தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது மாணவர்களின் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் எழுத்தும், காலை உணவு, திறன்மிகு வகுப்பறைகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2024-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே அதாவது மார்ச் மாதமே தொடங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கு நேற்றைய நிலவரப்படி, ஒன்றாம் வகுப்பில் 97,737 பேர், 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 8,178 பேர், மழலையர் வகுப்புகளில் 6,796 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 711 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதால் கிடைக்கும் நலத்திட்டங்கள் குறித்து தமிழகம் முழுவதும் நகரம், கிராமப்புறங்களில் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。