
























Updated on:
திருச்சி / புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமாரை ஆதரித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று இரவு திருவெறும்பூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது அமைச்சர் வேலையைப் பகுதி நேரமாகத்தான் பார்க்கிறார். முழுமையாக உதயநிதி ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார். அரசுப் பள்ளிகளில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. புதுக்கோட்டையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் வெட்டவெளியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை உள்ளது.
அவரது தொகுதியில் கூட பல பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தான் உள்ளன. அவர் வாக்குறுதி அளித்தபடி அரியமங்கலம் குப்பைக் கிடங்கை அகற்றவில்லை. திருச்சி பழைய பால் பண்ணை- துவாக்குடி அணுகு சாலை அமைக்கவில்லை. தமிழகத்தில் ஜாபர்சாதிக் மூலம் தான் கஞ்சா கடத்தப்படுகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டுக் கதவை அமலாக்கத் துறை தட்டினால் நாம் பொறுப்பல்ல. அன்பில் மகேஸை தோற்கடித்து, அதிமுக வேட்பாளர் குமாரை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், தமிழகத்தில் திருவெறும்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை உட்பட 36 இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அவலநிலையை ஆல்பமாக தயாரித்து வைத்துள்ளதாகக் கூறி, அதை மக்களிடம் அண்ணாமலை காட்டினார்.
மீண்டும் புதுக்கோட்டை தொகுதி: முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி பாஜக வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்தை ஆதரித்து ஆவுடையார்கோவிலில் நேற்று அண்ணாமலை பேசியது: தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயரும். இதன் மூலம் ஏற்கெனவே நீக்கப்பட்ட புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீண்டும் ஏற்படுத்தப்படும்.
அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் எஸ்.டி.ராமச்சந்திரனுக்கு திருநாவுக்கரசரின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. முன்னாள் திமுக எல்எல்ஏ உதயம் சண்முகத்தின் மகன் சரண், வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் உதவித் தொகையை பெற்று வந்த 51 ஆயிரம் பேர் திமுக ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதும் அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர் என்.ராமச்சந்திரனை ஆதரித்தும், கந்தர்வக்கோட்டையில் சி.உதய குமாரை ஆதரித்தும் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。