
























Updated on
:
1 min read
புதுடெல்லி: இன்று தேர்தல் நடைபெறவுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் நிலவும் சமூக- அரசியல் சூழலை அசாதாரணமான ஒரு சூழ்நிலை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஐ-பேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜனவரியில் சோதனை நடத்தியது. அப்போது திடீரென வந்த முதல்வர் மம்தா அந்த வளாகத்திற்குள் நுழைந்து, ஐ-பேக் தொடர்பான கோப்புகளை கைப்பற்றி சென்றார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: "இது மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையிலான சாதாரண மோதல் அல்ல. ஒரு புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு, பதவியில் இருக்கும் ஒரு முதல்வர் நேரில் செல்வார் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
எந்தவொரு மாநில முதல்வரும் விசாரணையின் நடுவே இதுபோன்று உள்ளே நுழைந்து ஜனநாயகத்தைப் பேராபத்தில் ஆழ்த்திவிட்டு, இதை மத்திய- மாநில அரசு இடையிலான மோதலாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. இது, ஒரு முதல்வர் என்ற அதிகாரத்தில் இருப்பவர் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கை. இதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகமே ஆபத்துக்கு உள்ளாகியுள்ளது. மாநிலத்தில் நிலவும் நடைமுறை யதார்த்தங்களை நீதிமன்றம் கவனிக்காமல் புறந்தள்ள முடியாது.
இது ஒரு விதிவிலக்கான சூழல். ஏற்கெனவே ஒரு வழக்கில் (எஸ்ஐஆர் வழக்கு) நீதிமன்ற அதிகாரிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம். யதார்த்தத்தை எங்களால் மூடி மறைக்க முடியாது. நீங்கள் சட்ட ரீதியாக நுணுக்கமான வாதங்களை முன்வைக்கலாம். ஆனால் மாநிலத்தில் நடக்கும் நடைமுறைச் சிக்கல்களை நாங்கள் கவனிக்காமல் கண்ணை மூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。