























Updated on:
சென்னை: மருத்துவம் படித்த பிஹார் மாணவிக்கு மாவோயிஸ்ட் அமைப்பு சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்ட நிலையில், கல்வி சான்றிதழ்களை விடுவிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி அந்த மாணவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஹாரைச் சேர்ந்த மாணவி ஒருவர் மருத்துவம் படித்தார். இவருக்கு பிஹார் மாநிலத்தில் செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சம் கல்விக் கட்டணமாக பல்வேறு தவணைகளில் செலுத்தப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமை, அந்த தொகையை முடக்கியது. மாணவிக்காக மாவோயிஸ்ட் அமைப்பிடம் கல்விக் கட்டணம் வசூலித்த சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது.
இதனால் அந்த மாணவிக்கு கல்விச் சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகம் மறுத்தது.தனக்குரிய சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி சம்பந்தப்பட்ட மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவியின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். அதை எதிர்த்து அந்த மாணவி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாணவி செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் தேசிய புலனாய்வு முகமையால் முடக்கப்பட்டுள்ள சூழலில் கல்விச் சான்றிதழ்களை தடையின்றி வழங்கும்படி கல்லூரி நிர்வாகத்தை நிர்பந்திக்க முடியாது.
முடக்கப்பட்ட தொகையை விடுவிக்கக்கோரி மனுதாரர் சம்பந்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம், அல்லது கல்விக் கட்டணத்தை மீண்டும் செலுத்தி மருத்துவ படிப்புக்கான சான்றிதழ்களை வழங்கக் கோரலாம், எனக்கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。