

























Updated on
:
1 min read
மதுரை: தமிழகத்தில் இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் கடந்த ஆண்டு மார்ச் 5-ல் கல்லூரி மாணவிகள் 25 பேர் பயணம் செய்த கல்லூரிப்பேருந்து ஆலங்குளம் அருகே சென்றபோது, இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் போதையில் பேருந்தை நிறுத்தி மாணவிகளை ஆபாசமாகப் பேசி, ஓட்டுநரையும் தாக்கி பேருந்தை சேதப்படுத்தினர்.
இதுதொடர்பான புகாரின் பேரில் பெருங்குடி போலீஸார் சங்கர், அஜித்குமார், சந்திரபோஸ் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மூவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: மது போதையில் இருந்தவர்களின் செயலை சாதாரணமாகக்கருத முடியாது. இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பது ஒரு சமூக மற்றும் கலாச்சார நடைமுறையாக இருந்தாலும், அது பொது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கவோ, வன்முறை அல்லது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடவோ காரணமாக இருக்கக்கூடாது.
மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கடலூரில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் வீசிய மாலையால் பொறியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து பல உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதையடுத்து இறுதி ஊர்வலங்களுக்கு கட்டுப்பாடு விதித்து டிஜிபி சுற்றறிக்கை அனுப்பினார். இருப்பினும் இறுதி ஊர்வலங்களின் போது ஒழுங்கீன செயல்கள் தொடர்கின்றன.
இதை ஒழுங்குபடுத்த புதிய சட்டத்தை இயற்றுவது குறித்து ஆராய தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்படுகிறது. இது தொடர்பாக ஜூலை 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 31-க்கு தள்ளிவைக்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。