
























Updated on
:
1 min read
சென்னை: முதல்வராக விஜய் பதவி ஏற்ற 13 நாட்களில் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தூயசக்தியா அல்லது தூங்கும் சக்தியா? திமுக எனும் தீயசக்திக்கு மாற்றான தூயசக்தி நாங்கள் தான் என்று கூறிய விஜய் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற 13 நாட்களில் கொலை, பாலியல் குற்றம், கடத்தல், ரவுடியிசம், வன்முறை என கிட்டதட்ட 30-க்கும் அதிகமான குற்றங்கள் நடந்துள்ளதை தினசரி செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
முந்தைய திமுக ஆட்சியில் தான் மக்கள் உயிர் பயத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்தார்கள் என்று பார்த்தால், தற்போதைய தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில்தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அதுசரி, திருடன் கையில் சாவி கொடுத்ததைப் போல, குற்றவாளிகளை எல்லாம் அமைச்சர் பதவியில் அமர்த்தினால் குற்றங்கள் எப்படி குறையும்? அரசைக் கண்டு குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்? ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சரிசெய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட்டுவிட்டு, வித விதமான விளம்பரப் பரப்புரைகளிலேயே முதல்வர் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது அவரது அனுபவமற்ற ஆளுமையைத்தான் காட்டுகிறது.
அலுவல் பணிகளுக்கு வேண்டுமானால் கொஞ்ச காலம் அவகாசம் கோரலாம். ஆனால் சட்டம் ஒழுங்கு போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு அவசரகதியில் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்பதை முதல்வர் எப்போதுதான் உணர்வார்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。