

























Updated on:
சென்னை: “தவெக தலைவர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். அதற்கேற்ப அவரது ஆட்சி அமைய வேண்டும். அதை பொறுத்தே, எங்களது ஆதரவு தொடருமா, இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி காஸ் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம், கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில், தரமணியில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியது: “கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. இதனால் ஏராளமான ஓட்டல்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான ஓட்டல் தொழிலாளிகள் வேலை இழந்தனர்.
இச்சூழலில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அனைத்துப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும். பெட்ரோல், டீசல், காஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை பயன்படுத்தாமல் யாராலும் இருக்க முடியாது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்கிறது என்பதை சுட்டிக்காட்டி, இந்த விலை உயர்வை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. ஏனென்றால், கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது, பெட்ரோ, டீசல் விலையை யாரும் குறைக்கவில்லையே. எனவே, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை என்பது கிடைக்கவில்லை. ஆனால், அதிக இடங்களில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. ஆகவே, தனிபெரும் கட்சி என்கிற முறையில், தவெகவுக்கு தான் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு என்பது இருந்தது.
அப்படி, ஆட்சி அமைக்காமல் போயிருந்தால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்திருக்கும். அதனால், பாஜக கொல்லைப்புறமாக தமிழகத்தை ஆளக் கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கும். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதில் இருந்து தடுப்பதற்காகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தமிழகத்தில் இருக்க வேண்டும், மக்கள் தீர்ப்புக்கு விரோதமாக வேறு ஒரு ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதால் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருக்கிறோம்.
மக்களுக்கு கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக முன்வர வேண்டும். தவெக தலைவர் விஜய் நல்ல ஆட்சியை வழங்குவதாக தெரிவித்திருக்கிறார். அதற்கேற்ப அவரது ஆட்சி அமைய வேண்டும். அதை பொறுத்தே, எங்களது ஆதரவு தொடருமா, இல்லையா என்பதை நாங்கள் முடிவு செய்வோம்” என்று அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。