























Updated on
:
2 min read
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். அப்போது, தவெக எம்எல்ஏ விஜய் படத்தை காட்டி பொறுப்பேற்றது, புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியின் நிலை குறித்து கவனம் ஈர்க்க முயன்று அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்எல்ஏ மலையாளத்தில் உறுதி மொழியை ஏற்றது என பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்தன.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக தலா 1 இடங்கள் என மொத்தம் 18 இடங்களை கைப்பற்றியது.
திமுக 5, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1, தவெக 2, சுயேட்சை 3 இடங்களையும் வென்றன. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்வராக ரங்கசாமி கடந்த 13-ம் தேதி பதவியேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பதவியேற்றனர். தொடர்ந்து 18-ம் தேதி புதுச்சேரி தற்காலிக சட்டப்பேரவை தலைவராக அன்பழகனை, ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை சட்டப்பேரவை தற்காலிக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் கூடியது. தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம்.எல்.ஏக்களாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதில் புதுச்சேரி மங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக முதல்வர் ரங்கசாமி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கடவுள் அறிய உறுதி கூறுகிறேன் என அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
படங்கள் எம்.சாம்ராஜ்
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் நடந்தது. தவெகவில் இருவர் எம்எல்ஏக்களாக வென்றனர். இதில் மணவெளி தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட ராமு இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்புக்கான உறுதி மொழியை வாசித்தபோது கடவுள் அறிய எனக்கூறி விஜய் படத்தை காட்டினார். இதைப்போல ஏம்பலம் தொகுதி எம்எல்ஏ மோகன் தாஸ் கடவுள் என்.ஆர். அறிய என கூறி பதவியேற்றார்.
திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் பதவியேற்ற பிறகு கண்ணன் புகழ் ஓங்குக என்றார். தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உறுப்பினர்கள் ஆர்வமிகுதியால் உறுதி மொழியை விட கூடுதலான வார்த்தைகள் சொல்கின்றனர். அவை, பேரவை குறிப்பில் இருக்காது என்றனர். மற்றொரு தவெக எம்எல்ஏ சாய் சரவணன் குமார் பேரவை முடிந்த பிறகு தனியாக வந்து பதவிப் பிரமாணம் எடுத்துகொண்டார்.
பிரெஞ்சுக்காக மலையாளத்தில் உறுதி மொழி ஏற்ற புதுச்சேரி திமுக எம்எல்ஏ செந்தில்குமார்
பிரெஞ்சுக்காக மலையாளத்தில் உறுதி மொழி ஏற்ற திமுக எம்எல்ஏ: மத்திய அரசின் நிலைப்பாட்டால், புதுச்சேரியில் பிரெஞ்சு மொழி நிலைகுறித்து கவனம் ஈர்க்க அனுமதி கிடைக்காததால் சட்டப்பேரவையில் மலையாளத்தில் திமுக எம்எல்ஏ உறுதி மொழி ஏற்றார். பாகூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் திமுக எம்எல்ஏ செந்தில் குமார். அவர் பதவியேற்கும்போது மலையாளத்தில் உறுதி மொழியை வாசித்தார்.
பிரெஞ்சு மொழியில் உறுதி மொழி வாசிக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் சட்டப்பேரவை செயலர் தயாளன், பிரெஞ்சு மொழியில் உறுதிமொழி வாசிக்க நடைமுறை இல்லை எனக் கூறி அனுமதி மறுத்துள்ளார். அதையடுத்து அவர் மலையாளத்தில் உறுதி மொழியை வாசித்தார்.
இதுபற்றி எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கேட்டதற்கு, “புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியின் நிலை குறித்து நான் கவனத்தை ஈர்க்க விரும்பினேன். ஆனால் சபாநாயகர் மறுத்துவிட்டார். எனவே, எனது எதிர்ப்பைப் பதிவு செய்து, பிரெஞ்சு மொழியின் நிலை குறித்துக் கவனத்தை ஈர்க்க நான் மலையாளத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன்.” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。