























கோப்புப் படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
:
1 min read
திருவாரூர்: தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உட்பட கல்வி உதவிப் பொருட்களை அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
இதில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனைத்து கல்வி உதவிப் பொருட்களும் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலமாக நேரடியாக பள்ளிகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படுகின்றன.
ஆனால், தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு அதன் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த பொறுப்பில் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு சென்றுதான் பெற்று வர வேண்டும் என்ற நிலை உள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல்வேறு கிராமங்களில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது சொந்த பொறுப்பில் பள்ளி வேலைநாட்களில் வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு சென்றுவரும் நிலை உள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழல் ஏற்படுவதுடன், தங்களது சொந்த பணத்தை செலவுசெய்து பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்க செல்லவேண்டி உள்ளது.
எனவே, பள்ளிகளுக்கே பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உதவிப் பொருட்களை கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியது: வட்டாரக் கல்வி அலுவலகத்துக்கு தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர்கள் சென்று நோட்டுப் புத்தகங்களை 3 பருவத்துக்கும் தனித்தனியாக சென்று சொந்த செலவில் வாங்கி வர வேண்டி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆண்டுக்கு 10 நாட்கள் ஆசிரியர்கள்பாடம் நடத்த முடியாமல் போகிறது.
எனவே, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறையே தங்களது சொந்த பொறுப்பில் கல்வி உதவி பொருட்களைக் கொண்டு வந்து வழங்குவதைப்போல, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。