


















Updated on:
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சாதாரண பக்தரைப் போல மாஸ்க் அணிந்து அதிரடி ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம், சிறப்பு தரிசனத்துக்காக ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், “தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விசேஷ மற்றும் சிறப்பு தரிசனங்களுக்காக பக்தர்களிடம் அர்ச்சகர்களும், ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலிப்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் போலி தரிசன டிக்கெட் வழங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் திருச்செந்தூர் கோயிலில் தொடர்ந்து பல்வேறு புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதையடுத்து தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று காலை திருச்செந்தூர் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோயில் அதிகாரிகள் யாருக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல், தனது காரை கோயில் வளாகத்துக்கு வெளியே சற்று தொலைவில் நிறுத்தினார். பின்னர், சாதாரண டி-ஷர்ட் மற்றும் மாஸ்க் அணிந்து, தனது உதவியாளருடன் ஒரு சாதாரண பக்தரைப் போலச் சென்றார்.
அங்கு விரைவாக சாமி தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்குமாறு தன் உதவியாளரை அர்ச்சகர்களிடம் அனுப்பினார். வந்திருப்பது அமைச்சர் என்று தெரியாமல், “தலைக்கு தலா ரூ.1,000 வீதம் நான்கு பேருக்கு மொத்தம் ரூ.4,000 கொடுத்தால் உடனே விஐபி (VIP) தரிசனத்தூக்கு அழைத்துச் செல்கிறோம்” என்று அங்குள்ள அர்ச்சகர்கள் பேரம் பேசியுள்ளனர்.
தன்னிடம் தற்போது கைவசம் ரொக்கப் பணம் இல்லை என்று கூறிய அமைச்சர், அங்கிருந்த அர்ச்சகரின் கூகுள் பே எண்ணுக்கு ரூ.4,000 பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பியுள்ளார். பணம் கணக்கில் ஏறியதை அர்ச்சகர்கள் உறுதி செய்த அடுத்த நொடியே, தனது மாஸ்க்கை கழற்றி தான் யார் என்பதை அமைச்சர் வெளிப்படுத்தினார்.
பணப் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ஆதாரத்துடன் அர்ச்சகர்களையும், அதற்குத் துணையாக இருந்த ஊழியர்களையும் அமைச்சர் கையும் களவுமாகப் பிடித்ததால் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஊழல் அராஜகத்தில் ஈடுபட்ட கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்களை கோயில் அலுவலகத்துக்கு வரவழைத்த அமைச்சர், அவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கக் கடிதம் எழுதி வாங்கியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, அன்னதான கூடத்துக்குச் சென்று பக்தர்களோடு பக்தர்களாக அமர்ந்து உணவருந்திய அமைச்சர், அங்கு வழங்கப்படும் அன்னதான டிக்கெட் குறித்து ஆய்வு செய்தார். அங்கும் சில குழப்பங்கள் இருப்பதை அறிந்த அமைச்சர் ஊழியர்களைக் கடுமையாக எச்சரித்தார்.
மேலும் திருச்செந்தூர் கோயிலின் சொத்துக்கள், மாதாந்திர வருவாய் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டார். இந்தச் சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த திடீர் நடவடிக்கையை பக்தர்கள் வெகுவாக வரவேற்றனர்.
மேலும் அமைச்சர் ரமேஷ் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இணையத்தில் பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்கள். பணம் வசூலித்தோரிடம் மன்னிப்புக் கடிதம் அல்ல, விளக்கக் கடிதம் கேட்டுள்ளோம். அதோடு அன்னதானம் , கோயிலின் சொத்துக்கள், ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். இந்த ஆய்வு முடிவுகள் வெளியான பிறகு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。