

























Updated on:
சென்னை: கள உதவியாளர் பணி உடல்தகுதி தேர்வில், மின்கம்பம் ஏறி இறங்க ஷூ பயன்படுத்தலாம் என, விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் 1,850 களஉதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதில் 9,400 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக, உடற்தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், மின்வாரிய கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதி தேர்வில், மின்கம்பம் ஏறி இறங்கும் தேர்வுக்கு ஷூ பயன்படுத்தலாம் என விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெறும் காலில் மின்கம்பம் ஏறி இறங்க வேண்டும் என்ற விதி இருந்தது.
அதாவது, 30 அடி உயர மின்கம்பத்தில் ஏறி கால் வைக்க கட்டையை கட்டி, பின்னர் பிடிப்புக்கு ஒரு கயிற்றை கட்ட வேண்டும். இவை அனைத்தும் 8 நிமிடங்களில் செய்ய வேண்டும். தற்போது வெறும் காலில் மின்கம்பம் ஏற வேண்டும் என்ற விதியை திருத்தி ஷூ அணியலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。