























மீட்கப்பட்ட அம்மன் சிலை.
Updated on:
சென்னை: கோயிலில் இருந்து திருடி வெளிநாட்டுக்கு அம்மன் சிலையை கடத்த முயன்ற 3 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் சரக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் உமாராணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மராஜன்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே 3 பேர் தொன்மையான சிலையை பையில் வைத்து கடத்த முயற்சிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த 3 பேர் போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (33), அதே மாவட்டம் ஆத்தூர் வடபாதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (33), காஞ்சிபுரம் மாவட்டம் நத்தப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ் (36) என்பது தெரியவந்தது.
விக்னேஷ் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 30.5 செ.மீ. உயரம், 16 செ.மீ. அகலம், சுமார் 2.300 கிலோ எடை கொண்ட தொன்மையான உலோக அம்மன் சிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டதும் உறுதி செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலில் இருந்து அந்த சிலை சட்டவிரோதமாக திருடப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது மீட்கப்பட்டுள்ள சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, இதன் பின்னணியில் செயல்படும் சிலை கடத்தல் கும்பல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。