






















Updated on:
சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 4-ம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல், அனைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து பராமரித்தல், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்தல், நீர்க்கசிவுகளை சரி செய்தல், வடிகாலில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை உடனடியாக மேற்கொண்டு முடிக்க மண்டல அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
மின் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் பள்ளிகளில் உள்ள அனைத்து மின் விசிறிகள், மின்விளக்கு பொத்தான்கள், மின்சார மணி, மின்னாக்கி உள்ளிட்ட மின் சாதனங்களை முறையாக பராமரிக்கவும், தேவை இருப்பின் புதிதாக மாற்றவும், மின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பள்ளி வளாகங்களில் கொசுக்கள், தேன் கூடுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக அகற்றி பூச்சிக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி பள்ளிக் கல்வித்துறை, மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு உணவு தயாரிக்கும் 38 மைய சமையற்கூடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், உணவுப் பொருட்கள் இருப்பு அறைகள், சமைக்கும் இடங்கள், வடிகால் பாதைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஆகியவற்றை முற்றிலும் சுகாதாரமான முறையில் பராமரித்து தயார்நிலையில் வைக்க வேண்டும்.
எல்பிஜி சிலிண்டர்கள் இருப்பு நிலை மற்றும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும், பள்ளிகள் திறந்த முதல் நாளே முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் உணவு வழங்குவதற்குத் தேவையான பாத்திரங்கள் தயாராக இருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。