

























நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
Updated on:
சென்னை: “திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி, கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் தவெக அரசு ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு “வெள்ளை அறிக்கை” என்ற பெயரில் உங்கள் நிதியமைச்சர் மரிய வில்சன் வெறும் கடன் பத்திரத்தை மட்டுமே வாசித்திருந்த நிலையில், தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் குறித்து சட்டமன்ற உரையில் நீங்களும் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. கடனைக் காரணம் காட்டி கொடுத்த வாக்குறுதிகளைக் கிடப்பில் போடுவதற்கு நீங்கள் திட்டம் தீட்டுகிறீர்களோ எனத் தோன்றுகிறது.
காரணம், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரத்தை திமுக எப்படியெல்லாம் சிதைத்து, மக்களின் தோள்களின் மீது கடன் சுமையைக் கூட்டி வைத்திருந்தது என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல, நேற்றைக்கு வந்த தவெக புலனாய்வு செய்து இதைப் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை.
பல அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வந்த வெட்ட வெளிச்சமான விஷயம். இவ்வளவு ஏன், தேர்தல் பிரச்சாரத்தின் போது, இதே பொருளாதாரக் கடனைச் சுட்டிக் காட்டி திமுகவை விமர்சித்தவர் தானே நீங்கள்?
தமிழகம் கடன் சுமையில் தவிக்கிறது என்று தெரிந்தும் கூட, முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே மையமாகக் கொண்ட திருமணத்திற்கு ஒரு பவுன், குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை, பட்டதாரிகளுக்கு ரூ.4000 நிதியுதவி, பயிர்க்கடன் முழுவதுமான தள்ளுபடி என இத்தனை வாக்குறுதிகளை எதற்கு வாரி இறைத்தீர்கள்? மாற்றம் தருவோம் என மேடைக்கு மேடை எதற்கு முழங்கினீர்கள்?
நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நம்பித் தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் முதல்வரே. திமுக விட்டுச் சென்ற கடனைக் காரணம் காட்டி கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் நீங்கள் ஏதேனும் சமரசம் செய்ய முயன்றால், அதை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது!” என்று அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。