





















Updated on:
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமான நிலையில், அவரது உடல் சென்னையில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84), வயது மூப்பின் காரணமாக ஏற்படக்கூடிய உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்றுமுன்தினம் காலமானார். இதையொட்டி, கார் பந்தயத்துக்காக துபாயில் இருந்த அஜித்குமார், உடனடியாக சென்னை திரும்பினார்.
சென்னை, பாலவாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மோகினி மணியின் உடலுக்கு, முதல்வர் விஜய் நேற்றுமுன்தினம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர்கள் சரத்குமார், சிவா, பிரசன்னா, நாசர், இயக்குநர்கள் ஏ.எல். விஜய், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் எஸ்.தாணு உட்பட பலர் அஜித்குமார் தாயாரின் உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, அஜித்குமாரின் தாயார் மோகினி மணியின் இறுதி ஊர்வலம் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு உடல் வந்ததும் அஜித்குமார், தனது தாயாரின் உடலை மின் மயானத்துக்கு சுமந்து சென்றார். அங்கு குடும்பத்தினர் முன்னிலையில், அஜித்குமாரின் தாயார் மோகினி மணியின் உடலுக்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இறுதி ஊர்வலத்திலும், மின் மயானத்திலும் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இறுதியில் அவர்களுக்கு நடிகர் அஜித்குமார் நேரில் நன்றி தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。