
























துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி ரூபேஷ் மற்றும் கைது செய்யப்பட்ட சூர்யா, உதயராஜா, கார்த்திக் ராஜா, ராகேஷ் ராஜா.
Updated on:
சென்னை: சென்னை நொளம்பூர் யூனியன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ்(50). இவர் தனது மனைவி செல்வி, மகன்கள் சஞ்சய்(25), சரத்குமார்(27) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சரத் மற்றும் சஞ்சய் ஆகியோர் வீட்டினருகே லாரியில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த உதயா என்பவர் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவரும் உதயாவை கையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து, உதயா தனது சகோதரர்கள் கார்த்திக், ராகேஷ் மற்றும் சில நண்பர்களுடன் சஞ்சய் மற்றும் சரத் ஆகியோரின் வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கத்தியால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த முருகதாஸையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் காயமடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, செல்லும் வழியிலேயே சஞ்சய் உயிரிழந்தார், சரத் மற்றும் முருகதாஸ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முருகதாஸின் மனைவி செல்வி, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரூபேஷ் என்பவரை பிடிக்கும்போது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தார், இதனால் போலீஸார் தற்காப்புக்காக ரூபேஷை கால் முட்டியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார்(24), மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த உதயராஜ்(21), சூர்யா(20), கார்த்திக் ராஜா(28), ராகேஷ் ராஜா(26), மேஷாக்(22), சூர்யபிரகாஷ்(27) ஆகியோரையும் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நொளம்பூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。