























Updated on
:
1 min read
சென்னை: திமுக மண்டலக் குழுத் தலைவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய அதிமுகவினரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கணேசன் (52).
இவர் திமுகவின் 38-வது வட்டச் செயலாளராகவும், சென்னை மாநகராட்சியின் 4-வது மண்டலக் குழுத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணேசன் நேதாஜி நகர் 3-வது தெருவில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதிமுகவைச் சேர்ந்த விநாயகம், செல்வம், டெல்லிராஜ் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திடீரென திமுக அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் கணேசனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை வெட்டி தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கணேசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதனால் அச்சமடைந்த அதிமுகவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் காயமடைந்த கணேசன், சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பின் சம்பவம் குறித்து கணேசன் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விநாயகம், செல்வம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。