























Updated on:
பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பிறகு 1,500 அடி ஆழ பள்ளத்தாக்கில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீநந்தா (15), கடந்த 7-ம் தேதி தனது பெற்றோர், உறவினர்கள் 40 பேருடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா வந்தார். அன்று மாலை 6 மணியளவில் சிக்கமகளூருவில் உள்ள சந்திரோனா மலைப்பகுதிக்கு அனைவரும் சென்று இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு ஸ்ரீநந்தா, மாணிக்தாரா அருவிக்கு அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். மாலை 7 மணியளவில் இருட்டிய நேரத்தில் ஸ்ரீநந்தா காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து அவரது பெற்றோர் சிக்கமகளூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரகுமார், வனத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் அடங்கிய 60 குழுக்களை அமைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினார். இரவும் பகலுமாக நடந்த தேடுதல் வேட்டையில், மனிதர்கள் செல்ல முடியாத செங்குத்தான பள்ளத்தாக்குப் பகுதிகளில் தேடுவதற்கு அதிநவீன ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 1,500 அடி பள்ளத்தாக்கில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கண்டு பெற்றோரும் உறவினர்களும் கண்ணீர் விட்டு அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சிக்கமகளூரு காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திரகுமார் கூறுகையில், ‘‘பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மரணம் விபத்தாக தெரிந்தாலும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。