





















Updated on
:
1 min read
சென்னை: ‘சிறுநீரக திருட்டு வழக்கு விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த சிறுநீரக திருட்டு தொடர்பான விசாரணை, தேர்தல் காரணமாக சற்று தொய்வடைந்தது. தற்போது இந்த விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முழு வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடைபெறும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தவிர்த்து, மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் உள்ள மருத்துவமனைகள் அனைத்தும் இணை இயக்குநர்களின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் 70 சதவீதத்தினர் இத்தகைய மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனைக்குச் சென்றால் தரமான சிகிச்சை கிடைக்கும், மருத்துவர்கள் எப்போதும் இருப்பார்கள், மருத்துவமனை வளாகம் தூய்மையாக இருக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்குவதே எங்களின் முதன்மை இலக்கு.
தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமம் கோரி சுமார் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த நடைமுறையை எளிதாக்க, இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவுடனேயே தற்காலிக உரிமம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் மருத்துவ வசதிகள் குறித்து சுய அறிவிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு செல்லத்தக்க தற்காலிக உரிமம் உடனடியாக வழங்கப்படும். அந்த ஓராண்டு காலத்துக்குள் உரிய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 5 ஆண்டுகளுக்கான நிரந்தர உரிமம் வழங்கப்படும். அதேபோல், தமிழகத்தில் நிலுவையில் உள்ள கருத்தரிப்பு மையங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்பட உள்ளன.
அரசு மருத்துவமனைகளின் தூய்மை மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் ‘காயகல்பம்’ திட்டத்தின்கீழ், இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரவரிசை வழங்கப்பட்டு வந்தது. இனி, மருத்துவமனைகளைத் தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்பட வைக்க, ஆண்டுக்கு 4 முறை இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைகள் உரிய முறையில் கவுரவிக்கப்படும்” என்றார் அமைச்சர் அருண்ராஜ்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。