






















Updated on:
நம் கண்கள் தடுக்கி விழுந்தால் தமிழ் சினிமாவில் ‘மர்டர் மிஸ்டரி’, ‘இன்வெஸ்டிகேட்டிவ் க்ரைம் த்ரில்லர்’, ‘சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர்’ வகைப் படங்களின் மீதுதான் விழுந்தாக வேண்டும். அந்த அளவுக்கு ஆண்டுக்கு 280 படங்கள் வெளியானால் அவற்றில் 200 படங்கள் இந்த மூன்று வகையைச் சேர்ந்தவைதான். ஆனால், இந்த 200 படங்களில் 20 படங்கள் கூட கதை சொல்லலில் நம்மைக் கட்டிப்போடும் படங்களாக இருப்பதில்லை. ஆனால், முற்றிலும் விதிவிலக்காக வந்திருக்கிறது ‘அந்தரன்’.
சசியின் ‘டிஸ்யூம்’ (2006) படத்தில் ‘சந்தியா’வை மணம் முடிக்கவிருக்கும் மாப்பிள்ளையாக ஒரு காட்சியில் வந்து அடக்கமாகவும் அமைதியாகவும் அழகாகவும் நடித்து அறிமுகமானவர்தான் பிரஜின். திறமையும் அர்ப்பணிப்பும் மிகுந்த தமிழ் நடிகர். அவரது 20 ஆண்டுகள் திரைப் பயணத்தில் ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ உள்ளிட்ட பல நல்ல கதைக் களங்களும் கதாபாத்திரங்களும் அமைந்தாலும் அவரை கம்பீரமாகக் கைதூக்கி விட்டிருக்கிறது இந்த ‘அந்தரன்’.
இந்தப் பெயர்ச் சொல்லுக்கான பொருள் ‘மறைந்திருந்து தாக்கும் வேடன்’. தலைப்புக்கு மட்டுமல்ல; தேர்ந்துகொண்ட கதைக் களத்துக்கு மிக நேர்மையான பிடிமானத்துடன் நகரும் திரைக்கதையும் அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இந்தப் படத்தை முதல் காட்சியில் தொடங்கி கடைசிக் காட்சி வரை எங்கும் தலையையும் கண்களையும் திருப்பிவிட முடியாதவாறு தன்னுடைய ‘கிராஃப்ட்’ திறமையைக் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சந்தோஷ் ராவணன்.
தமிழ் சினிமாவுக்குச் சினிமாவை அணுவணுவாகப் புரிந்துகொண்ட ரசனையான இயக்குநர் கிடைத்திருக்கிறார். இவரைப் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அடையாளம் கண்டு, அவரது ‘மேக்கிங்’ திறமைக்குத் தேவையான பட்ஜெட்டை கொடுத்திருப்பதுடன் படத்தில் நாயகியின் மிக அப்பாவாக வெகு இயல்பாக நடிக்கவும் செய்திருக்கும் எம்.கே.சாம்பசிவம் பாராட்டுக்குத் தகுதியான அறிமுகத் தயாரிப்பாளர்.
இனி விமர்சனத்துக்குள் நுழைவோம். கல்லூரிப் படிப்பை முடித்துப் பணி புரிந்துவரும் கார்த்திகாவுக்கு (இவானா வருண்) திருமணம் பேசி முடிக்கிறார்கள். திருமணம் நிச்சயம் முடிந்த கையோடு லாரி மோதி இறக்கிறான் மணமகன். இவனை மட்டுமல்ல, இதற்கு முன்பு இதேபோல் கார்த்திகாவுக்கு நிச்சயமானதும் அந்த மாப்பிள்ளை கொல்லப்படுவான். இதனால் திருமணம் என்றாலே வேண்டவே வேண்டாம், என்னால் இனியொரு உயிர் போகக் கூடாது என்று பயத்தோடு வாழ்கிறாள் கார்த்திகா.
ஆனால், கார்த்திகாவுடன் கரம் பற்ற முடிவாகும் இளைஞர்களுக்கு முடிவு கட்டுவது யார் என்பது மட்டும் காவல் துறைக்குப் புரியாத புதிர். இந்தச் சூழ்நிலையில்தான் கார்த்திகாவின் மாப்பிள்ளைகள் மரணிக்கும் பின்னணியைப் புலனாய்வு செய்ய வருகிறார் காவல் அதிகாரி செழியன் (பிரஜின்). பயந்து கிடக்கும் கார்த்திகா மீது அக்கறை காட்டி, அவளுடன் நெருங்கிப் பழகி, அவளது உதவியுடன் எப்படி அந்தக் கொலையாளியை செழியன் நெருங்குகிறார் என்பது கதை.
திருமண வயதில் முதிர்ந்து நிற்கும் ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையில் நிகழும் விசித்திரமான ஹாரர் மரணங்களை மையமாகக் கொண்டு ஒரு காட்சி கூட உபரியானது, உப்புச் சப்பில்லாது என்று சொல்லமுடியாதபடி திரைக்கதையும் காட்சிகளையும் வெகு சுவாரசியமாக நகர்த்திச் செல்கிறார் இயக்குநர்.
செழியன் கைக்கு வழக்கு வந்ததுமே வேகமெடுக்கும் திரைக்கதை, இயல்பான, தர்க்கம் சிதையாத திருப்பங்களைக் கொண்டு சரியான கால அளவில் உண்மையை நோக்கிய புதிர்களை விடுவிக்கிறது. மிக மிக முக்கியமாகக் கதையோடும் கதாபாத்திரங்களோடும் ஒன்ற வைக்கும் மாயத்தைத் திரைக்கதை இறுதிவரை சாத்தியப்படுத்துவதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கிறது.
எங்காவது ஒரு இடத்திலாவது ஒரு சிறு ஓட்டையை இயக்குநர் தவறவிட்டிருப்பார் என்று தேடினால், அதற்கு அவர் வாய்ப்பே கொடுக்கவில்லை. நல்வரவு சந்தோஷ் ராவணன்.
காவல் அதிகாரி செழியனாக வரும் பிரஜின் கட்டுக்கோப்பான உடல் தோற்றம், அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார். தனது ‘கேரக்டர் ஆர்க்’கிறகு உணர்ச்சிகரமான ஆழத்தைத் தந்துள்ளார். இவரை ஒருபடி மிஞ்சும் விதமாக கார்த்திகாவாக நடித்திருக்கும் இவானா கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.
வருண், அதிரன், அனுபமா குமார், செந்தில் குமாரி உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களில் வரும் நடிகர்கள் மர்மத்தை உற்சாகத்துடன் துரத்தும் இக்கதைக்கு நம்பகத்தன்மையையும் முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு ஆழத்தையும் கூட்டியிருக்கிறார்கள்.
புரொடெக்ஷன் டிசைன் தொடங்கி தொழில்நுட்ப ரீதியாகச் சிறந்து விளங்கும் இப்படத்துக்கு கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும், மிகக் கச்சிதமான வெட்டுகளைக் கொடுத்துள்ள அஸ்வின் - சதீஷ் இணையின் படத்தொகுப்பும் படத்தை அழகான சீரான ஓட்டத்துக்குப் பெரும் பங்களித்திருக்கின்றன. தரமான ‘த்ரில்லர்’ திரையரங்க அனுபவம் விரும்பும் ரசிகர்களுக்கு ஏற்ற படம்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。