



























Updated on
:
1 min read
இலைக் கட்சியிலிருந்து பணிவானவருடன் சேர்ந்து கரை ஒதுங்கிய டெல்டா மண்டலத்து ‘ட்ரீட்மென்ட்’ புள்ளி சூரியக் கட்சியில் சேரும்போதே தனது ‘நாடு’ தொகுதியை தனக்காக உறுதிப்படுத்திக் கொண்டார். அதன்படியே அவருக்கு சூரியக் கட்சியும் அந்தத் தொகுதியை ஒதுக்கியது. இலைக் கட்சியில் நின்ற போதே கோடிகளை கொட்டி செலவழித்தவர், இம்முறையும் அதையும் தாண்டி இறக்கினாராம்.
ஒரு ஓட்டுக்கு மூவாயிரம் ரூபாய் வீதம் பட்ஜெட் போட்டு கவனிப்பு மேளா நடத்தி இருக்கிறார்கள். கடந்த முறை இலைக் கட்சியில் நின்றபோது ‘பட்டுவாடா’ செய்தவர்களே இம்முறையும் பட்டுவாடா ‘பணியை’ ஏற்று நடத்தினார்களாம். அதன்படி ஒரு சில இடங்களில், இது இலைக்குப் போகும் ஓட்டு என்று தெரிந்ததால் அந்த வீடுகளை ‘ஸ்கிட்’ செய்துவிட்டு நகர்ந்திருக்கிறார்கள்.
அப்படி ஒரு வீட்டைக் கடந்த போது, “எங்களுக்கு ஏம்பா பணம் வரல?” என்று அந்த வீட்டில் இருந்தவர்கள் ‘உரிமையுடன்’ பிடித்து உலுக்கினார்களாம். அதற்கு பட்டுவாடா பார்ட்டிகள், “நீங்களெல்லாம் இலைக் கட்சி” என்று சொல்லி எஸ்கேப் ஆகப் பார்த்தார்களாம். ஆனால் அப்போதும் விடாதவர்கள், “வேட்பாளரே அந்தக் கட்சி தானேப்பா... அவரே கட்சி மாறி சூரியன்ல நிக்கிறப்போ, போன முறை இலைக்கு ஓட்டுப் போட்ட நாங்க இப்ப அவருக்காக சூரியனுக்கு போட மாட்டோமா?
ஒழுங்கு மரியாதையா பணத்தை எண்ணி வெச்சுட்டு மறு வேலையப் பாரு” என்று டபாய்த்தார்களாம். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த வீட்டில் இருந்த 5 ஓட்டுக்கும் சேர்த்து மொத்த மாக 15 ஆயிரத்தை எண்ணிக்கொடுத்தார்களாம். அதை வாங்கிக் கொண்டு, “எங்க ஓட்டு சூரியனுக்குத்தான்” என்று புல் தரையில் சத்தியம் செய்தாராம் அந்த வீட்டின் குடும்பத் தலைவர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。