

























Updated on
:
1 min read
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷம்மி சில்வா, மற்றும் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஷம்மி சில்வா. இதைத் தொடர்ந்து 2021, 2023, 2025-ம் ஆண்டுகளில் போட்டியின்றி தலைவராக தேர்வானார். இந்நிலையில் வீரர்களிடமிருந்து வந்த புகார்கள் மற்றும் சர்வதேச அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, மார்ச் தொடக்கத்தில் இருந்தே சில்வாவை பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை அரசு பரிசீலித்து வந்தது.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில், சில்வா கடந்த வாரம் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகவை சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது பதவியிலிருந்து விலகுமாறு ஷம்மி சில்வாவிடம், அதிபர் அனுரா குமார வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று கொழும்பு நகரில் ஷம்மி சில்வா மற்றும் வாரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. சுமார் மூன்று மணி நேரம் நீடித்த ஆலோசனைக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இடைக்கால குழு வாரியத்தின் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துள்ளது.
அரசியல் தலையீடு காரணமாக சில்வா வெளியேறியது குறித்து ஐசிசி எதிர்வினையாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் சில்வாவை பதவியிலிருந்து நீக்கியபோது, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பது ஐசிசி-யின் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர் தகுதியை ஐசிசி உடனடியாக ரத்து செய்தது.
அக்காலகட்டத்தில் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்ற சில்வா, மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。