

























Updated on
:
1 min read
மதுரை: பனை தொழிலாளியை சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் தென்காசி துணை ஆட்சியர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன். இவர் பதநீருக்கு பதிலாக கள் இறக்குவதாக சந்தேகத்தின்பேரில் ஆலங்குளம் எஸ்ஐ இசக்கிராஜா ஆய்வு செய்ய வந்தார். அப்போது மணிகண்டனுக்கும் எஸ்ஐ-க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டதில் மணிகண்டன் காயமடைந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் சேட், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் எஸ்ஐ இசக்கிராஜா சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்றும் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியம் என்ன எனக் கேட்டார். அரசுத் தரப்பில், துணை ஆட்சியர் வைஷ்ணவி பால் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து தென்காசி துணை ஆட்சியர் காணொலி மூலமாக ஆஜராகி, துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் முதல்கட்ட விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 2-க்கு தள்ளிவைத்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。