

















சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை, பழனிசாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், இன்பதுரை எம்.பி உள்ளிட்டோர் சந்தித்து, அதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என வலியுறுத்தி கடிதம் வழங்கினர்.
Updated on
:
2 min read
சென்னை: ‘‘அதிமுகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக் கூடாது’’ என சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ.க்கள் நேற்று மனு அளித்தனர்.
அதிமுகவின் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை எம்எல்ஏக்கள் முறையே மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். பிறகு அவர்கள் தவெகவில்தங்களை இணைத்துக்கொண் டனர். இதையடுத்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இன்பதுரை எம்பி உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, ‘‘அதிமுகவில் இருந்து விலகிய எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளக்கூடாது’’ என்று மனு அளித்தனர். தொடர்ந்து அக்ரி கிருஷ்ண மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில், அதிமுக எம்எல்ஏக்கள், தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இருப்பினும் இதனை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை தலைவரிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் அளித்துள்ளார்.
அந்தக் கடிதம் பரிசீலனையில் இருப்பதாக பேரவை தலைவர் சமீபத்தில் பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், தங்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர். ஏற்கெனவே அவர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அதிமுகவின் கடிதம் ஆய்வில் இருக்கும் நிலையில், அவர்கள் பதவியை ராஜினாமா செய்தபோது, அதை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது.
எனவே அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். முதல்வர் சட்டப்பேரவையில் பேசும் போது, எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் என்று கூறினார். ஆனால் இந்த அரசில் காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா என்று தெரியவில்லை.
இந்த அரசு குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கூறுகின்றனர். தூய்மையான ஆட்சியை தருவதாக கூறிய முதலமைச்சர், முறைகேடாக பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துகிறார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து பேர் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கோரி பேரவை தலைவரிடம் கடிதம் அளித்துள்ளனர்.
மேலும், பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய இன்பதுரை, ‘‘நாங்கள் கொடுத்த மனுவின் அடிப்படை என்னவென்றால், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்த பிறகும், அதை மீறி பேரவைத் தலைவர் எப்படி ராஜினாமாவை ஏற்க முடியும்? அறிவிப்பு வந்த பிறகுதான் ராஜினாமா செல்லுபடியாகும். அறிவிப்பு வருவதற்கு முன்பே அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ளனர்.
அப்படி இருக்கும்போது அந்த ராஜினாமாவை ஏற்கக்கூடாது. சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பொய்யாக நம்புகிறார்கள். இது தவறு. எந்த அரசாணை வெளியிட் டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் இருக்கிறது’’ என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。