























Updated on:
புதுடெல்லி: உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியின் 9 எம்பிக்களில் 6 பேர், கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தை புறக்கணித்ததை அடுத்து, அவர்களின் உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியில் இருந்து 6 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. கடந்த 14-ம் தேதி உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மொத்தமுள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் பங்கேற்காததை அடுத்து இந்த விவகாரம் தீவிரமடைந்தது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தில், மக்களவை எம்பிக்கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கட்சியின் ஒரே மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் இந்த கூட்டதில் கலந்து கொண்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “இன்று நடைபெற்ற கூட்டத்தில், அரவிந்த் சாவந்த், ராஜாபாவ் வாஜே, அனில் தேசாய் ஆகிய மூன்று மக்களவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நான் மாநிலங்களவை உறுப்பினர். கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பினர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறியுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம்.
இன்னமும் அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பினர்களாகவே உள்ளனர். எங்கள் சின்னத்தில்தான் வெற்றி பெற்றனர். கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பாஜக நாட்டின் அரசியலை, குறிப்பாக மகாராஷ்டிர அரசியலை களங்கப்படுத்தி உள்ளது. அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்தார்.
நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகிய 6 எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதற்கான நடைமுறை இன்னும் முழுமையடையவில்லை என்றும், அவர்கள் வரும் நாட்களில் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் சமர்ப்பித்துள்ள கடிதத்தில் உள்ள கையெழுத்தை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, உள்கட்சி கூட்டங்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிப்பது சட்டப்படி செல்லாது என ஏக்நாத் ஷிண்டே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்களவையில் நடைபெறும் வாக்கெடுப்பு தொடர்பாக மட்டுமே கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியும். உட்கட்சிக் கூட்டங்களுக்கு பிறப்பிக்க முடியாது. உட்கட்சிக் கூட்டங்களுக்கு பிறப்பிக்கப்படும் கொறடா உத்தரவை மீறுவதால் சட்டப்படி எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை நீதிமன்றங்கள் பலமுறை தெளிவுபடுத்தி உள்ளன” என ஷிண்டே தரப்பு நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகவோ அல்லது வேறு கட்சியிலோ இணையும்போது அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தை பிரயோகிக்க முடியாது என்றும், எனவே இவர்கள் 6 பேரும் விரைவில் சிவ சேனாவில் இணைவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。