




















Updated on
:
1 min read
குவாஹாட்டி: அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. உத்தராகண்ட், குஜராத்துக்கு பின்னர் பொது சிவில் சட்டம் நிறைவேறவுள்ள மூன்றாவது மாநிலமாக அசாம் உள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சார்பாக, அமைச்சர் அதுல் போரா இன்று பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா மே 27 அன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மே 13 அன்று, இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஹிமந்த பிஸ்வா சர்மாவின் தலைமையில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இம்மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பிறகு, மே 21 முதல் 26 வரை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மாநில அரசு இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய முதல்வர் ஹிமந்த சர்மா, “பட்டியல் பழங்குடியினர் (மலைப்பகுதி) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (சமவெளிப்பகுதி) ஆகியோர் பொது சிவில் சட்டத்தின் வரம்பிற்கு வெளியே இருப்பார்கள். அவர்களது 'பாரம்பரிய மத வழக்கங்கள், நடைமுறைகள் மற்றும் சடங்குகள்' ஆகியவற்றுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
பொது சிவில் சட்டம் முக்கியமாக, திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது, பலதார மணத் தடை, பெற்றோரின் சொத்தில் மகள்களுக்கு சம உரிமை மற்றும் திருமணமின்றி இணைந்து வாழும் உறவுகள் தொடர்பான விஷயங்கள் ஆகிய நான்கு விஷயங்களை உள்ளடக்கியிருக்கும்” என்று கூறியிருந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், உத்தராகண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களைப் பின்பற்றி, பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றிய நாட்டின் மூன்றாவது மாநிலமாக அசாம் திகழும்.
சமீபத்தில் நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில், 126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 82 இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. அசாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கூட்டணிக் கட்சிகள் தலா 10 இடங்களில் வென்றதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 102-ஆக உயர்ந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。