





















Updated on:
டெஹ்ரான்: கடல் கண்ணி வெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
அமெரிக்கா உடனான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் நூற்றுக்கணக்கான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசியுள்ளது. குறிப்பாக கடலுக்கு அடியிலும், சில நூறு அடி ஆழத்திலும் கடலுக்கு மேலேயும் கண்ணி வெடிகள் வீசப்பட்டன. இதனால் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடங்கி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியை உடனயாக திறக்க வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றி உள்ளது. ஆனால் கடலுக்கு அடியிலும் சில நூறு அடி ஆழத்திலும் வைக்கப்பட்ட கண்ணிவெடிகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்தும் தெளிவான விவரங்கள் இல்லை.
இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக திறப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஈரான் அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், வழக்கமான ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான வரைபடத்தையும் வெளியிட்டிருக்கிறது. இந்தப் பாதை வழியாக நேற்று முன்தினம் 10 எண்ணெய் கப்பல்கள் மட்டும் கடந்து சென்றன.
இதுகுறித்து சர்வதேச பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலை தொடங்கிய உடன், ஈரான் ராணுவத் தரப்பில் ஹார்முஸ் ஜலசந்தி முழுவதும் சிறிய ரக படகுகள் மூலம் கடல் கண்ணிவெடிகள் வீசப்பட்டன. அவற்றை முறையாக அகற்றும் தொழில்நுட்பம் ஈரானிடம் இல்லை.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் மட்டுமே கடல் கண்ணிவெடிகளை அகற்றும் சிறப்பு கப்பல்கள் உள்ளன. ஆனால், அந்த கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் நுழைய ஈரான் ராணுவம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஜலசந்தியின் மிக குறுகிய பாதை வழியாகவே கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。