























Updated on
:
1 min read
ராஞ்சி: 29-வது தேசிய சீனியர் தடகள கூட்டமைப்பு போட்டியில் (பெடரேஷன் கோப்பை) பந்தய தூரமான 100 மீட்டர் தூரத்தை 10.09 வினாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் குரிந்தர்வீர் சிங்.
25 வயதான இவர், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர். சனிக்கிழமை அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை 100 மீட்டர் ஆடவர் பிரிவின் இறுதி சுற்றில் 10.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதையடுத்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.
13 வயதில் தடகளத்தில் அவருக்கு ஆர்வம் வந்துள்ளது. தனது ஆர்வத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் களத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
“100 மீட்டர் ஓட்டத்தில் நான் ஆர்வமாக இருந்தேன். அதற்கான பயிற்சியை தொடங்கிய நேரத்தில் பயிற்சியாளர்கள் சிலர் 100 மீட்டர் ஓட்டம் வேண்டாம்; 400 மீட்டர் ஓட்டத்தை தேர்வு செய்யலாம் என என்னிடம் தெரிவித்தனர். 100 மீட்டர் ஓட்டம் இந்தியர்களுக்கு சரி வராது என்றனர். இந்தியர்களின் உடல் அமைப்பு அதற்கு ஏற்றவாறு இல்லை என்றனர். அது தவறு என அவர்களுக்கு உணர்த்த வேண்டுமென நான் விரும்பினேன். இந்தியர்களின் ஜீன் உறுதியானவை” என தனது சாதனை ஓட்டத்துக்கு பிறகு குரிந்தர்வீர் சிங் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் இளையோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கம், ஆசிய யு20 சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் (ரிலே), தெற்காசிய போட்டியில் வெள்ளி (ரிலே) பதக்கத்தை குரிந்தர்வீர் வென்றுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。