

























Updated on
:
1 min read
ஆண்டிபட்டி: மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மதுரையில் உலகப் புகழ்பெற்ற சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என்பதால், வைகை ஆற்றில் போதுமான தண்ணீர் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் நீர் வளத்துறை அரசாணையின் படி வைகை அணையிலிருந்து ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 29 வரை மொத்தம் 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக உள்ளது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காகவும், மதுரை மாநகரின் குடிநீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்காகவும் இன்று (24.04.2026) காலை 6:00 மணிக்கு முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து சீறிப்பாயும் இந்தத் தண்ணீர் இணைப்பு கால்வாய் வழியாக வைகை ஆற்றைச் சென்றடையும்.
திறக்கப்பட்ட நீரானது தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்கள் வழியாகப் பாயும். எனவே, கால்வாய் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, குளிக்கவோ அல்லது கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாம் என வைகை அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。