


























புதுடெல்லி: வெளியிடப்படாத தனது புத்தகத்தை மேற்கோள்காட்டி தன்னை வெளிச்சத்துக்கு இழுத்தது தேவையற்றது என்று முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் நரவனே கூறியுள்ளார்.
ஃபோர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி (Four Stars of Destiny) என்ற பெயரில் நரவனே புத்தகம் ஒன்றை எழுதி இருந்தார். கடந்த 2020ல் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலின்போது, சீன ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் முடிவை அரசியல் தலைமை, முழுவதுமாக ஆயுதப் படைகளிடமே விட்டுவிட்டது என அந்த புத்தகத்தில் எழுதி இருந்ததாக புகார் எழுந்தது.
வெளிவராத அந்த புத்தகத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தை காரணமாகக் காட்டி, கடந்த பிப்ரவரியில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், இந்த புத்தகமும், நரவனேவும் சர்ச்சையில் சிக்கினர்.
இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ள நரவனே, “புத்தகம் சரிபார்க்கப்படும் வரை அதை வெளியிடுவதை நிறுத்திவைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம், பதிப்பாளரிடம் கேட்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை அந்த விஷயம் அத்துடன் முடிந்துவிட்டது. நான் அதில் இருந்து மீண்டுவிட்டேன். எனவே, அது ஒரு முடிந்துபோன அத்தியாயம். மேலும், என்னை தேவையில்லாமல் மேற்கோள் காட்டி, வெளியிடப்படாத புத்தகத்தை வெளிச்சத்துக்கு இழுத்ததும், அதன் மூலம் மறைமுகமாக என்னையும் வெளிச்சத்துக்கு இழுத்ததும் தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். நான் ஏற்கனவே இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறேன். மூன்றாவது புத்தகம் விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。