


























Updated on:
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி இன்றுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே தனது மிகப் பெரிய பலம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2004-ம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த ராகுல் காந்தி, 2004 நாடாளுமன்றத் தேர்தல் முதல் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார். 2004, 2009, 2014 ஆகிய தேர்தல்களின்போது அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, 2019-ல் வயநாடு தொகுதியில் இருந்தும், 2024-ல் ரே பரேலி தொகுதியில் இருந்தும் மக்களவைக்கு தேர்வானார். கடந்த 2024 தேர்தலுக்குப் பிறகே எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரசியலமைப்பு பதவியை முதல் முறையாக ராகுல் காந்தி ஏற்றார்.
இன்றுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ராகுல் காந்தி, தனது இந்த இரண்டு ஆண்டுகளும் மக்களின் குரலை அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்ல அர்ப்பணிக்கப்பட்டவை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக நான் பொறுப்போற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளின் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு பணிக்காகவே அர்ப்பணிக்கப்பட்டன. ஒவ்வொரு இந்தியரின் குரலையும் அதிகார மையங்களுக்குக் கொண்டு சேர்ப்பதே அந்த பணி.
நீட் தேர்வு எழுதுபவர்களுக்கான போராட்டம், தேர்தல் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கான போராட்டம், அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் என ஒவ்வொரு களத்திலும் நான் உங்களுடன் நின்றேன்; இன்றும் உங்களுடன் நிற்கிறேன்; என்றும் உங்களுடனேயே இருப்பேன். தெருக்கள் முதல் நாடாளுமன்றம் வரையிலான எனது போராட்டங்களுக்கு உங்கள் நம்பிக்கையே எனக்கு மிகப்பெரிய பலம்.இந்த பயணம் நீண்டது, ஆனால் எனது உறுதி மாறாதது. உங்களுக்காக ஒவ்வொரு போராட்டத்தையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。