























Updated on
:
2 min read
ஐ.நா. வெளியிட்டிருக்கும் 2025ஆம் ஆண்டுக்கான உலக உணவுப் பாதுகாப்பு - ஊட்டச்சத்து நிலை குறித்த அறிக்கை சில முக்கியமான கேள்விகளை முன்வைத்திருக்கிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு - வேளாண் அமைப்பு, சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதி, யுனிசெஃப், உலக உணவுத் திட்டம், உலகச் சுகாதார நிறுவனம் ஆகிய ஐ.நா. அமைப்புகளால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த அறிக்கையில், இந்தியாவின் உணவுப் பழக்கத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பசுமைப் புரட்சியால் அதிக அளவிலான அரிசி, தானியங்களை விளைவிக்கக் கற்றுக்கொண்டாலும், சத்தான உணவு நாட்டில் உள்ள அனைவரையும் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியாக இருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை
2006ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 24 கோடி பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் (Malnutrition) பாதிக்கப்பட்டிருந்தனர். 2025இல் இது 17.2 கோடியாக இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், உலக அளவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டோர் அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா இன்னும் முதலிடத்தில் உள்ளது.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஒரு புறம் இருக்க, இன்னொரு புறம் இந்தியாவில் உள்ள குழந்தைகள், 18 வயதைக் கடந்தவர்களில் அதிகமானோர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற தரவுகள் கவலை அளிக்கின்றன.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், குறைந்த உடல் உழைப்பு போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணிகள். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவை வெவ்வேறு பிரச்சினைகளைப் போலத் தோன்றினாலும், ஊட்டச்சத்தான உணவை உட்கொள்வதில்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை.
சத்தான உணவு கிடைக்காததால் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும், ஆரோக்கியமற்ற உணவு வகைகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் உடல் பருமன் பாதிப்பும் அதிக அளவில் இருப்பதால், இரண்டும் சரிசெய்யப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவு எது?
உணவு உட்கொள்வதால் மட்டும் ஆரோக்கியமாக இருந்துவிட முடியாது என்பதைத்தான் இந்த அறிக்கை நினைவூட்டுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் உண்ணப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அரிசி, கோதுமை, மாவு உணவு வகைகளைப் போன்று கலோரி நிறைந்த உணவே அதிகம் உட்கொள்ளப்படுகிறது. இரும்புச்சத்து, புரதச்சத்து, கால்சியம், விட்டமின் போன்று அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் (Essential nutrients) நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளும் பழக்கம் இந்தியர்களிடம் குறைவு.
இதனால் ஊட்டச்சத்து நிறைந்த சமூகமாக மாறுவதில் இந்தியா சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், மாறும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அறிவியல் சார்ந்த தீர்வுகளை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது.
ஸ்மார்ட் புரதங்களும் (Smart proteins), அதிகப் பயன்தரும் உணவு வகைகளும் (Functional foods) இந்தப் பிரச்சினைகளுக்கான புதிய தீர்வாகச் சொல்லப்படுகின்றன. அதாவது, சத்துக்கள் செறிவூட்டப்பட்ட பொருள்களைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுதல்.
இரும்புச் சத்து, விட்டமின், ஃபோலிக் அமிலம் நிறைந்த அரிசி, மாவு வகைகள், சத்து நிறைந்த பால் வகைகள் என இந்தியர்களின் உணவுப் பழக்கத்துக்கு ஏற்பச் செறிவூட்டப்பட்டவை எல்லாம் செயல்பாட்டு உணவு வகைகள் எனப்படுகின்றன.
உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் புரதங்கள் தயாரிக்கப்படுகின்றன. தாவரப் புரதங்கள் (Plant-based proteins), ஆய்வகங்களில் ஸ்டெம் செல்களிலிருந்து வளர்க்கப்படும் இறைச்சி (Cultivated meat) போன்றவை ஸ்மார்ட் புரதங்களின்கீழ் வரும்.
பாரம்பரியக் கால்நடை வளர்ப்பு முறைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தும்போது இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் குறைந்த செலவிலும் புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளைத் தயாரிக்க முடியும்.
எதிர்காலத் திட்டங்கள்
உலகிலேயே முதல் முறையாக 1980களிலேயே ஜப்பான் நாட்டில் செயல்பாட்டு உணவு வகைகள் தொடர்பான ஆராய்ச்சி முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சீனா, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளும், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் செயல்பாட்டு உணவு வகைகளையும் ஸ்மார்ட் புரதங்களையும் பழக்கமாக்க முயற்சிகள் எடுத்துள்ளன.
2024இல் இந்தியாவில் முதல் முறையாக ‘BioE3’ (Biotechnology for Economy, Environment & Employment) கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையின்கீழ் செயல்பாட்டு உணவு வகைகள், ஸ்மார்ட் புரதங்கள் ஆகியவை முக்கியத் துறைகளாக அங்கீகரிக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT), உயிரித் தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவிக் கழகம் (BIRAC) இணைந்து உயிரித் தொழில்நுட்பம் அடிப்படையிலான உணவு உற்பத்தி முறைகளை வளர்க்கத் தேவையான ஆராய்ச்சிக்கான உதவிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளன.
காலத்தின் தேவை
தற்போது 70க்கும் அதிகமான ஸ்மார்ட் புரதங்களைத் தயாரிக்கும் தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கிவருகின்றன. இதன் மூலம் செயல்பாட்டு உணவு வகைகள், ஸ்மார்ட் புரதங்கள் தயாரிப்பு ஆகியவை இந்தியாவில் வேகமாக வளர்ந்துவருகின்றன.
அதேவேளையில், இந்தப் புதிய தயாரிப்பு முறைகளுக்காக இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் (FSSAI) நிர்ணயிக்க வேண்டிய விதிமுறைகள், சான்றிதழ்கள் குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புகள் காலத்தின் தேவையாகவும் இந்தியாவுக்கான மிகப் பெரிய சவாலாகவும் உள்ளன. பாரம்பரிய உணவு முறைகளுக்குப் பழக்கப்பட்டுள்ள இந்தியர்கள், ஆரோக்கியமானது என்று சொன்னாலும்கூட ஆய்வகங்களில் வளர்க்கப்படும் உணவை ஏற்றுக்கொள்ள வெகு காலம் ஆகும் என்பதுதான் கள நிலவரம்.
இயற்கையான உணவு வகைகளையே பெரும்பாலும் விரும்பும் இந்திய வாழ்க்கை முறைக்கு முன்பு இந்தத் தொழில்நுட்பப் புதுமைகள் குறித்து விழிப்புணர்வும் புரிதலும் ஏற்படுத்த வேண்டிய முக்கியப் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。