
























Updated on:
சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25ம் தேதி உத்தரவிட்டது.
அதன்படி, ஜூன் 5-ம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, பிற வாரிய பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் 1 ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இந்நிலையில் மாநில தகவல் ஆணைய உத்தரவையும், தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த அறிவிப்பையும் ரத்து செய்யக் கோரி அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தகவல் உரிமைச் சட்டம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது; சிபிஎஸ்இ போன்ற மத்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என வாதிடப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பில், தகவல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை வெளியிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; இந்த உத்தரவை எதிர்த்து தனிப்பட்ட பள்ளிகள் தான் வழக்கு தாக்கல் செய்ய முடியும்; சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது; விதிகளின்படி பள்ளிகள் கட்டண விவரங்களை வெளியிட வேண்டும் என வாதம் முன்வைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஜூன் 18ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கவுதம் மற்றும் மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜய ஆனந்த் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。