

























தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
Updated on
:
1 min read
சென்னை: விஜய் பெரும்பான்மையுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க நான் தயார் என தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான பணிகளை அக்கட்சி தொடங்கியது. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு வழங்கி உள்ளது. இந்நிலையில், புதன்கிழமை அன்று ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரினார். ஆளுநரிடம் இருந்து அழைப்பு வராத நிலையில், வியாழக்கிழமை அன்று மீண்டும் ஆளுநரை அவர் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.
அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சி அமைக்க தேவையான அந்த பெரும்பான்மை எண்ணை விஜய் காட்டவில்லை.” என்ற விளக்கம் இருந்தது.
இந்த சூழலில் தனியார் செய்தி நிறுவனத்திடம் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் கூறியதாவது: “ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களின் ஆதரவு மற்றும் அதற்கான கடிதத்தை நான் விஜய்யிடம் கேட்டேன். ஒரு குறிப்பிட்ட கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ இணைந்து ஆட்சி அமைக்கும் உரிமையை யார் கோரினாலும் அவர்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அது ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மை உள்ளதா என்பது மட்டும்தான்.
118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது. பெரும்பான்மை இல்லாத அரசு, ஆட்சி அமைத்து, குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் வந்த தீர்ப்பு புதிய ஆட்சி அமைப்பது தொடர்பானது அல்ல.
நான் இங்கு யாரும் பதவியேற்பதை தடுக்க வரவில்லை. நான் ஜனநாயகத்தை முன்னெடுக்க வந்துள்ளேன். ஜனநாயக ரீதியாக தேர்வானவர் தடுக்கப்படக்கூடாது. பெரும்பான்மையுடன் வந்தால் உடனடியாக பதவியேற்பது தொடர்பாக அழைப்பு விடுக்க தயார். ஆனால், அதைச் செய்ய முடியாத சூழலே தற்போது நிலவுகிறது. இது எனது தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விஷயம் அல்ல” என தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。