
















Updated on:
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் வழங்கப்படும் 44 விதமான சேவைகளை இதுவரை 1.86 லட்சம் பேர் பெற்று பயன் அடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்கு ஏதுவாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்ஸ்-அப் செயலி சேவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, பொதுமக்கள் மாநகராட்சியின் 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi அல்லது வணக்கம் என்ற குறுஞ்செய்தி அனுப்பி தமிழ், ஆங்கிலம் உள்பட 12-க்கும் மேற்பட்ட மொழிகளில் 44 வகையான சேவைகளை எளிதில் பெறலாம்.
இந்த வாட்ஸ்அப் செயலி மூலம் சொத்து வரி, தொழில் வரி, வணிக வரி, வணிக வளாக வாடகை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணங்கள் செலுத்துதல், வணிக உரிமம் மற்றும் விளம்பரப் பேனர்கள் உரிமம், முதல்வர் படைப்பகம், மெரினா நீச்சல் குளம், சமூகக் கூடம், ரிப்பன் கட்டிடத்தில் மரபு நடைபயணம், வீடுதோறும் தேவையற்ற சோபா மற்றும் மெத்தை கழிவுகள் பெறுதல், கட்டிடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் உள்ளிட்ட சேவைகளுக்கான முன்பதிவுகள், கட்டிட வரைபடத்துக்கான நகர திட்டமிடல், பிறப்பு-இறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல், குழந்தையின் பெயர் சேர்த்தல், புகார் தெரிவித்தல் மற்றும் தகவல் சேவைகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.தடையற்ற சேவையை வழங்க, இந்த தளம் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) நேரடிப் பணியாளர் உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக சிக்கலான கோரிக்கைகள் விரைவான தீர்வுக்காக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த வாட்ஸ்- அப் செயலியை பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் காகிதமில்லா பயன்பாட்டை சாத்தியமாக்குவதோடு, மக்களுக்கு தாமதமின்றியும், எவ்வித அலைச்சலுமின்றியும் எளிதாக சேவைகளை பெற முடிகிறது.
இந்த வாட்ஸ்-அப் செயலி சேவை பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு டிஜிட்டல் சேவைத் தளமாக செயல்பட்டு, 2.14 லட்சத்துக்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் 1.86 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெற்று பயனடைந்துள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த கட்டணச் சேவைகள் மூலமாக ரூ.43.76 கோடி வருவாய் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளது.
பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி தேவையான சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。