


























Updated on
:
2 min read
சென்னை: “2006-ல் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு ‘டிஸ்ரப்டர்’ ஆக செயல்படுவார்” என்று தமிழக பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1977 முதல் இதுவரையிலான தமிழக தேர்தல் வரலாற்றை உற்று நோக்கினால், வாக்காளர் எண்ணிக்கை உயர்வுக்கும், வாக்குப்பதிவு சதவீதத்துக்கும் இடையே ஒரு சமநிலையற்ற போக்கு நிலவுவதை அறியலாம்.
1980-ல் வாக்காளர் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரித்தபோது, வாக்குப்பதிவு 44 லட்சம் உயர்ந்தது. 1984-ல் 32 லட்சம் வாக்காளர்கள் உயர்ந்தாலும், வாக்குப்பதிவு 29 லட்சம் மட்டுமே உயர்ந்தது. 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தால் 22 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்தும், வாக்குப்பதிவு 6 லட்சம் குறைந்தது.
ஆனால், கடந்த 2006 தேர்தல் ஒரு முக்கிய திருப்புமுனை. 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்த நிலையில், வாக்குப்பதிவு 58 லட்சம் கூடியது. இதற்கு விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் முக்கிய காரணமாக அமைந்தது. அவர் உருவாக்கிய அலை, வாக்குப்பதிவில் பெரும் உயர்வை ஏற்படுத்தியதோடு, ஆட்சி சமன்பாடுகளையும் பாதித்தது.
அதேபோல, தற்போது நடந்துள்ள சட்டப்பேரவைத் தேர்தலைப் பொருத்தவரை, சிறப்புத் திருத்தங்களுக்கு (எஸ்ஐஆர்) பிறகு, மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.73 கோடி. சுமார் 86 சதவீத வாக்குப்பதிவு நடந்துள்ளதால், மொத்த வாக்குகள் 4.90 கோடியை எட்டியுள்ளது. எதிர்பார்த்ததைவிட இந்த உயர்வு அதிகம்.
இதில் விஜய்யின் பங்கு முக்கியமானது. 2006-ல் விஜயகாந்த் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஏற்படுத்திய அதிர்வுகளைப் போலவே, 2026-ல் விஜய் ஒரு ‘டிஸ்ரப்டர்’ (பிளவு ஏற்படுத்துபவர்) ஆக செயல்படுவார்.
விஜய்யின் தவெக 7 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெறவும், 20 முதல் 25 தொகுதிகளில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், தவெக உருவாக்கும் வாக்குப் பிளவு பல தொகுதிகளில் முடிவுகளை தலைகீழாக மாற்றும்.
தற்போதைய அரசின் மீதான அதிருப்தி காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சில பகுதிகளில் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் திமுக கடும் போட்டியை சந்திக்கக்கூடும்.
இவற்றைப் பார்க்கும்போது, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அதேநேரம், திமுக தனது ‘மகளிர் உரிமைத் தொகை’ போன்ற நலத்திட்டங்கள் மூலம் தனது ஆதரவு வாக்காளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே, ஆளுங்கட்சி தொடருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
மொத்தத்தில், இந்த தேர்தல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் நிலையான வாக்கு சக்தியும், மாற்றத்தை விரும்பும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் புதிய தேடலும் நேருக்கு நேர் மோதும் ஒரு களமாக இருக்கும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியின் புதிய கட்டத்தை தொடங்கக் கூடியதாக இத்தேர்தல் அமைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。