




























Updated on:
சென்னை: வெளிப்புற விளம்பரப் பலகைகள் வைப்பதற்கான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் 2 வாரங்களில் விசாரணையை முடித்து, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வெளிப்புற விளம்பரப்படுத்துவோர் சங்க உறுப்பினர் எஸ்.பிரேம்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: வெளிப்புற விளம்பரப் பலகைகள் வைக்க உரிமம் கோரிய விண்ணப்பங்கள் மீது, நகர வருவாய் அலுவலர் அலுவலக அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, சென்னை வெளிப்புற விளம்பரப்படுத்துவோர் சங்கத் தலைவர் பொன்னப்பன், செயலாளர் கே.வி.சுகுமார், பொருளாளர் கே.ஆர்.வெங்கடேஷ், உறுப்பினர் கருணாகரன் ஆகியோர் உரிமங்கள் வழங்குவது குறித்து தீர்மானிப்பதாகவும், உதவி வருவாய் அலுவலரான மாதவன் பாரபட்சமாக செயல்பட்டு, சட்டவிரோதமாக பணம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த பிப். 18-ம் தேதி சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவு, மாநகராட்சி ஆணையர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஆகியோரிடம் அளித்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுதாரர் கோரியிருந்தார்.
சட்டப்படி நடவடிக்கை
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணை வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.முரளி, “பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் என்பதால் இதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது, மனுதாரர் அளித்த புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டு, அவரது விசாரணையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவுசெய்த நீதிபதி, “2 வாரங்களில் விசாரணையை முடித்து, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
ஆணையர் தாக்கல் செய்யும் அறிக்கையில் குற்றம் நடந்ததற்கான முகாந்தரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。