


























Updated on:
காஞ்சிபுரம்: மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல தமிழக அரசு முடிவெடுத் திருப்பது வரவேற்கத்தக்கது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், உபநிஷத் பிரம்மேந்திர மடம் வளாகத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்பிகை சமேத அகத்தீஸ்வரர், ஹயக்ரீவர், ஸ்ரீராமச்சந்திர சுவாமி, ஸ்ரீராமயந்திரம் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய பீடாதிபதி ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, தனியார் புத்தக வெளியீட்டு விழாவிலும் கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய அரசைப் பொருத்தவரை எல்லா மாநிலங்களும் சமம்தான்.
தூத்துக்குடி போன்ற இடங்களில் பல பெரிய திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாதது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் கடன் தொகை தொடர்ந்து உயர்வது குறித்து கேட்கிறீர்கள். மாநிலத்தின் ஜிஎஸ்டிபி மதிப்பில் 3 சதவீதம் வரை கடன் வாங்கலாம்.
தமிழக அரசு ஏற்கெனவே வெளியிட்ட வெள்ளை அறிக்கையிலேயே அனைத்தும் உள்ளன. கடன் வாங்குவது தவறில்லை. கடன் வாங்கி என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஒரு அரசு கடன் வாங்கும்போது அதன்மூலம் பள்ளி, மருத்துவமனை, தொழில்நுட்ப நிறுவனங்கள் என பொதுமக்களுக்கான சொத்துகளை உருவாக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் குட்டிக்கதை மூலம் செய்யப்பட்ட விமர்சனங்கள் குறித்து கேட்கிறீர்கள். விமர்சனங்களை சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。