
























Updated on
:
1 min read
சென்னை: பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்க, முதுநிலை கோயில்களில் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் நேர ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
துறையின் செயலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் பி.என்.தர் மற்றும் துறைசார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு, நேர ஒதுக்கீட்டு முறை, தரிசன மேலாண்மை மற்றும் கட்டணச் சீட்டு விநியோகத்தை முறைப்படுத்துதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இத்திட்டத்தை முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை கோயில்களில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தி, பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கோயில்களுக்குச் சொந்தமான நகை, சிலைகள், ஆபரணங்கள் மற்றும் தொன்மையான பொருட்களைப் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கோயில் நிலங்களை மீட்டெடுத்தல் மற்றும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இனாம் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துதல், அங்கு பயிலும் மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், கல்வித் தரம்மற்றும் இதர மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், அன்னதானம், இதர நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த அமைச்சர் உத்தரவிட்டார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。