




















Updated on
:
2 min read
புதுடெல்லி: சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்ததை அடுத்து வங்கி நிர்வாகம் பணம் வழங்கிய நிலையில், மனிதாபிமானத்துடன் கூடியதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜீத்து முண்டா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக தனது சகோதரியின் மரணத்துக்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்கு எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வங்கிக்கு அவர் பலமுறை சென்றும், அதிகாரிகளிடம் இருந்து எந்த உதவியோ அல்லது தெளிவோ கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகக் கூறி இந்த மனிதாபிமானமற்ற நடத்தையை வங்கி நிாயயப்படுத்த முயன்றதுதான். வங்கி அதிகாரிகள் நடைமுறைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களையே கைவிடும் போக்கையே இது காட்டுகிறது.
ஜனநாயகத்தில் விதிகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தவிர, அவர்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை. இந்த கொடுமையான சம்பவம் ஒடிசா முழுவதும் மக்களின் உணர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அதோடு, இந்த சம்பவம் நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தச் சம்பவம் தனிப்பட்டதாக இருந்தாலும், வங்கி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு புரிதலை இது நமக்கு அளிக்கிறது. முதலில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்கு தெளிவான பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்படுவதை உடனடியாக உறுதி செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இது, மனிதாபிமானம், பரிவு, இரக்கத்துடன் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதை உறுதி செய்ய ஒரு தெளிவான சமிங்ஞையை அனுப்பும். உங்களின் இரக்கமுள்ள தலையீட்டால், குடிமக்களிடம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் மீண்டும் நிகழாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: ஒடிசா மாநிலம் கேந்துஜார் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி கக்ரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். மல்லிபாசி பகுதியில் உள்ள ஒடிசா கிராமின் வங்கிக் கிளையில் கக்ரா கணக்கு வைத்திருந்தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்பதற்காக ஜீத்து முண்டா வங்கிக்குச் சென்றுள்ளார்.
கல்வியறிவு இல்லாத பழங்குடியினரான ஜீத்து முண்டாவிடம், அவரது சகோதரியின் இறப்புச் சான்றிதழ் அல்லது வாரிசுச் சான்றிதழ் இல்லை. இதனால், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார்.
சட்ட நடைமுறைகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் விரக்தியடைந்த ஜீத்து முண்டா, கடந்த திங்கள்கிழமை மயானத்திற்குச் சென்று தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, எலும்புக்கூடை துணியால் சுற்றி தோளில் சுமந்தபடி 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து வங்கிக்கு வந்தார்.
இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இது வங்கியின் மனிதாபிமானமற்ற செயல் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியும் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்தில், ‘‘இறந்தவர் நேரில் வர வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தாகக் கூறப்படும் தகவல் தவறானது. சட்டப்படியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை வழங்க முடியவில்லை. அந்த நபர் மதுபோதையில் இருந்ததால் நடைமுறைகளை விளக்கிக் கூறியும் அவர் ஏற்கவில்லை. தற்போது அரசு அதிகாரிகள் வழங்கிய வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில், ரூ.19,402 தொகை 3 வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。