





















மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் | கோப்புப் படம்
Updated on
:
1 min read
திருவாரூர்: அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால், ஆட்சிக்கு ஆதரவு தரும் எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகம் மீண்டும் ஒரு தேர்தலைச் சந்திக்க கூடாது, கொல்லைப்புறம் வழியாக பாஜக ஆட்சி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்தோம்.
மேலும் இந்தத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு அதிமுக, திமுகவுக்கு எதிராகத்தான் இருந்திருக்கிறது. எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை என்கிற நிலையில், தனிப்பெரும் கட்சியாக 107 இடங்களில் வெற்றி பெற்றிருப்பது தவெக தான். எனவே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குத்தான் இருக்கிறது.
அந்த அடிப்படையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு கட்சி ஆட்சியில் அமர வேண்டும் என்ற வகையில் இடதுசாரிக் கட்சிகளும், விசிகவும் தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தோம்.
அப்படி இருக்கும்போது, அதிமுகவில் ஒரு தரப்பு எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக பெற்றால் அது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது. விஜய் சொல்லும் நல்லாட்சி என்பதற்கே அது விரோதமாக அமையும். அத்தகைய ஒரு நிலைக்கு அவர்கள் செல்லமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அப்படி அதிமுகவின் ஒரு கோஷ்டியின் ஆதரவை அவர்கள் பெற்றால் எங்களுடைய முடிவை நாங்கள் மறுபரிசீலனை செய்ய நேரிடும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், இரா.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி தவெகவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。