

















Updated on
:
1 min read
புதுடெல்லி: தேசிய மல்யுத்த சம்மேளனத்தில் பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் தலைவராக இருந்தபோது பலமல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், புகார் அளித்தும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
அதன் பின்னர் பிரிஜ் பூஷண் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பிரிஜ் பூஷண் சிங் மீது மீண்டும் பாலியல் புகார் குற்றச்சாட்டை வினேஷ் போகத் வைத்துள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில் வினேஷ் போகத் கூறியதாவது: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சாட்சிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடர அனுமதிக்க விரும்புவதாகவும் முன்னரே நான் முடிவு செய்திருந்தேன். பாதிக்கப்பட்டவரின் கண்ணியம் மற்றும் கவுரவம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், அவரது அடையாளத்தை வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
ஆனால் இன்று, சில சூழ்நிலைகளின் காரணமாக, நான் உங்கள் அனைவருக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போது நான் பேச விரும்பவில்லை. ஆனால், புகார் அளித்த அந்த ஆறு பாதிக்கப்பட்ட பெண்களில் நானும் ஒருவள் என்பதையும், எங்கள் சாட்சியங்கள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதையும் நான் கூற விரும்புகிறேன். பிரிஜ் பூஷணுக்கு எதிராக புகார் அளித்த 6 மல்யுத்த வீராங்கனைகளில் நானும் ஒருவள்.
கோண்டாவில் நடைபெறவுள்ள தேசிய திறந்தநிலை தரவரிசைப் போட்டியின் போது எனக்கோ அல்லது எனது அணிக்கோ ஏதேனும் நேர்ந்தால், அதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் போட்டி நடைபெறும் கோண்டா நகரம், பிரிஜ் பூஷணுக்கு தொடர்புடைய நகரமாகும். போட்டியின் போது எனக்கோ, எனது அணிக்கோ அல்லது ஆதரவாளர்களுக்கோ ஏதேனும் விரும்பத்தகாத சம்பவம் நடந்தால், அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。